இயக்குநர் மணிரத்னம் தனது முதல் திரைப்படமான ‘பல்லவி அனுபல்லவி’ முதல் ‘மவுனராகம்’, ‘நாயகன்’, ‘அஞ்சலி’ உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் 1992ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலம் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்த அவர், தொடர்ந்து ‘பாம்பாய்’, ‘உயிரே’, ‘அலைபாயுதே’, ‘குரு’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தக் லைப்’ உள்ளிட்ட சுமார் 20 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி ஒரு நீண்டகால வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கினார்.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்ற உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது முதல் முறையாக இயக்குனர் மணிரத்னத்துடன் சாய் அபயங்கர் இணைவது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. ‘டியூட்’, ‘பல்டி’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள சாய் அபயங்கர், தற்போது ‘கருப்பு’, ‘மார்ஷல்’, சிம்பு, தனுஷ் மற்றும் அட்லி இயக்கும் படங்கள் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
