மலையாள திரைப்படங்களில் ‘மரண மாஸ்’, ‘ஐ எம் காதலன்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும், மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார் சமீபத்தில் தமிழில் வெளியான ‘சிறை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றார். இந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படத்திலும் அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனிஷ்மா அனில்குமார் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், தனது ஆரம்பகாலத்தில் எதிர்கொண்ட சில சம்பவங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதாக தெரிவித்தார். ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அங்கு இருந்த ஒருவர் நேராக அவரிடம் பேசும்போது, “நீ ஹீரோயினாக நடிக்க வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும். உனக்கெல்லாம் தங்கை கதாபாத்திரம் தான் பொருத்தமாக இருக்கும்” என்று முகத்தில் அடித்தது போல கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார். அந்த நிகழ்வில் மட்டும் அல்லாமல் இதேபோன்ற கருத்துகளை இன்னும் சிலரும் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அந்த வார்த்தைகள் தனது மனதில் மிகவும் ஆழமாக பதிந்துவிட்டதாக கூறினார். அதனால் தான் ஆரம்ப காலத்தில் ஆடிஷன்களுக்கு செல்லும் போது அந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்து மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் பின்னர் தான் நடித்த திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு, அதே நபர் தன்னை மீண்டும் சந்தித்து “நீ மிகவும் நன்றாக நடித்திருக்கிறாய்” என்று பாராட்டியதாகவும் அனிஷ்மா அனில்குமார் கூறினார். தனது வாழ்க்கையில் நடந்த அந்த அனுபவம் தான் தன்னை மேலும் உறுதியுடன் முன்னேற தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
