ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன்!

நடிகர் கவின் ஜோடியாக ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். அதன் பின்னர் தெலுங்கில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தில் நிமிலியாக நடித்தார். சமீபத்தில் வெளியான சர்வம் மாயா திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலியின் காதலியாக சாதியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது தமிழில் இதயம் முரளி திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக தாஷமக்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் பாப் இசைக்கலைஞனாக இருக்கும் ஹரிஷ் கல்யாணை காதலித்து, அவரது வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இந்த படத்தை லிப்ட் திரைப்படத்தை இயக்கிய வினீத் பிரசாத் இயக்குகிறார்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் வினீத் பிரசாத் கூறும்போது, “வடசென்னை பகுதி மக்களை சினிமாவில் பெரும்பாலும் வன்முறையாளர்களாகவே சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் சென்னையின் பூர்வகுடி மக்கள். அவர்களுக்கு தனித்துவமான உச்சரிப்பும் கலாசாரமும் இருக்கிறது. அவர்களது தனித்துவமான இசைதான் பாப். அந்த பகுதியில் இருந்து பாப் இசை உலகில் சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த கதாபாத்திரத்திற்காக ஹரிஷ் கல்யாண் இரண்டு மாதங்கள் வரை பாப் இசைக் குழுவில் இணைந்து பணியாற்றி தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பயிற்சிகளை எடுத்துள்ளார். மிகவும் அர்ப்பணிப்புடன் அவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ப்ரீத்தி முகுந்தனின் கதாபாத்திரமும் முக்கியமானதாக இருக்கும். பெரம்பூர் பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக அவர் நடித்துள்ளார். கதையின் அனைத்து அம்சங்களையும் புரிந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இன்றைக்கு ப்ரீத்தி முகுந்தன் கேரளாவரைக்கும் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகையாக மாறி உள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணையும் ப்ரீத்தி முகுந்தனையும் மத்திய சென்னை பையனாகவும் பெண்ணாகவும் ரசிகர்கள் பார்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading