மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் மம்முட்டி. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள மம்முட்டி, தற்போது ‘பேட்ரியாட்’ எனும் அரசியல் பின்னணியைக் கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதேநேரத்தில், இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படம் ‘பாதயாத்ரா’ உருவாகி வருகிறது. முன்னதாக ‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய இந்த கூட்டணி, 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘பாதயாத்ரா’ திரைப்படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளது. இந்த திரைப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரிக்கிறார். கேரளாவின் காக்கநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணியில் உருவான திரைப்படங்களுக்கு கேரளாவில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
