தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் பார்வதி திருவோத்து. சமூக பிரச்சினைகள் மற்றும் சினிமா துறையில் பெண்களின் உரிமைகள் குறித்து எப்போதும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘Women oriented films’ எனப்படும் வகைப்பாட்டைப் பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களில் கதைகளை பாலின அடிப்படையில் பிரிப்பது தேவையற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “நாம் உருவாக்கும் திரைப்படங்களை ‘பெண்களை மையப்படுத்திய படங்கள்’ என்று தனியாக வகைப்படுத்தக் கூடாது. அனைத்து கதைகளும் மனிதர்களை மையமாகக் கொண்ட கதைகளாகவே பார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “பெண்களின் கதைகளை மனிதர்களின் கதைகளாகப் பார்க்காமல், ‘அது பெண்களின் கதை’ என்று தனியாக பிரித்துவிடுவது தான் இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்களின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளை பெண்கள் எளிதாக புரிந்து கொண்டு ரசிப்பது போலவே, பெண்களின் உணர்வுகளையும் ஆண்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால், சமூகத்தில் நிலவும் பாலின வேறுபாடே இந்த எண்ணத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது,” என்று அவர் தனது கருத்தை வலியுறுத்தினார்.
தற்போது ஹிருத்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டார்ம்’ தொடரில் நடித்துள்ள பார்வதி, தனது ஒவ்வொரு பேட்டியிலும் இத்தகைய ஆழமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். சினிமாவை ஒரு கலை வடிவமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
—
