இந்தியத் திரைப்பட உலகில் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்குபவர் ஏ.ஆர். ரகுமான். மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், ரசிகர்களால் ‘இசைப்புயல்’ என அழைக்கப்படுகிறார்.
7 தேசிய விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர். ரகுமான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக உலகளவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது பெற்றார். இந்திய சினிமாவைத் தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக திகழும் அவர், தற்போது பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.
மேடைகளில் பேசும்போதும் மிகவும் அளவாகவே வார்த்தைகளை பயன்படுத்தும் அவர், பேச்சின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், “வார்த்தைகளை தேவையின்றி அதிகமாக பயன்படுத்தக் கூடாது. நாம் பேசும் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை. தேவையில்லாமல் பேசிவிட்டேன் என்று உணர்ந்தால், அந்த நாள் முழுவதும் அதை பற்றி சிந்தித்து வருந்துவேன். அளவுடன் பேசுவது மிக முக்கியம். நாம் மனிதர்கள் என்பதால் தவறு செய்யும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. நல்ல விமர்சனங்களை ஏற்க வேண்டும்; அதே நேரத்தில், நம்மை நோக்கி வரும் கடுமையான விமர்சனங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். பலர் தங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்திற்காக அந்த வேலையைச் செய்கிறார்கள். எனவே, அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல், சமாளித்து முன்னேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
