கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய திரைப்படம் ‘தெய்வத்திருமகள்’. இந்த திரைப்படத்தில் விக்ரமின் மகளாக சிறுமியாக நடித்திருந்தவர் சாரா அர்ஜுன். அந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற அவர், பின்னர் 2014 ஆம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கிய ‘சைவம்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினியின் இளமைக் காலக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாரா அர்ஜுன்.
தற்போது 20 வயதை எட்டியுள்ள சாரா அர்ஜுன், இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாகவும் கவனம் பெற்று வருகிறார். நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் சாரா அர்ஜுன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சாரா அர்ஜுனை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ஏ.எல். விஜய் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் குறித்து பெருமையாக பேசியுள்ளார். அதில், “சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் 1300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதால், பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பள்ளியில் தேர்வு முடிந்து விடுமுறை கிடைக்கும் போதும், அவர் சென்னையில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்து தங்குவார். அவர் என்னை அங்கிள் என்று அழைத்தாலும், சாரா அர்ஜுன் எனக்கு என் மகள் போலவே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
