2017ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இசை, நட்பு, காதல் மற்றும் கனவுகளை மையமாகக் கொண்ட அந்தப் படம், ஹிப் ஹாப் ஆதியின் திரைப்பயணத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றது.
தற்போது ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து, கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் நிறுவனமும், ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் ஆதியுடன் பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான முதல் பார்வை மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், ‘Aura 10/10’ எனப்படும் முதல் பாடல் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
