ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தை இயக்கிய பிறகு, கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவர் தயாரித்து வைத்திருந்த ஆக்ஷன் கதை அவர்களுக்கு விருப்பமில்லையெனவும், அதற்கு பதிலாக ஒரு லேசான கதையை அவர்கள் விரும்பியதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனது அடுத்த படத்திற்காக வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார். அப்போது அவர் கூறிய கதை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவாக வெளியிடப்பட்டது. தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதே சமயம் இந்த படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ‘இரும்புக் கை மாயாவி’ திரைப்படம்தான் என்றும் சிலர் பேசத் தொடங்கினர்.
இந்த நிலையில் அந்த புதிய படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் முழுமையாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முன் தயாரிப்பு பணிகளை சீராக மேற்கொள்ளவே அவர்கள் தற்போது அங்கு தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
