‘சரஸ்வதி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அவர் தெலுங்கு மொழியில் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் மார்ச் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த படம் சென்சார் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அதற்கு ‘யு/ஏ 16 பிளஸ்’ சான்றிதழை வழங்கியுள்ளனர். மொத்தம் 121 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் தலைப்பு தொடர்பாக சென்சார் குழுவினர் ஒரு சிறிய மாற்றத்தை பரிந்துரைத்தனர். ‘சரஸ்வதி’ என்பது பெண் கடவுளின் பெயரை குறிக்கும் என்பதால், தலைப்பில் சிறிய மாற்றமாக ‘எஸ்’ என்ற எழுத்தை சேர்த்து ‘எஸ். சரஸ்வதி’ என மாற்ற வேண்டும் என்று சென்சார் குழு தெரிவித்தது. இதனை படக்குழுவினர் ஏற்றுக்கொண்ட பிறகே படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு கேரளாவில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சுரேஷ் கோபி நடித்த ‘ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா’ என்ற திரைப்படமும் இதேபோன்ற சிக்கலை சந்தித்தது. அந்த படத்திற்கும் சென்சார் பிரச்சினை ஏற்பட்டதால் பின்னர் ‘ஜானகி வி’ என்ற பெயரில் ஒரு ஆரம்ப எழுத்தை சேர்த்த பிறகே அது வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
