மக்களுக்கு பிடித்த கதாநாயகியாக நிச்சயமாக உருவாவேன் – நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா நம்பிக்கை!

நடிகை குஷ்பு 1988ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது, 38 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகள் அவந்திகா மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாள திரைப்படமான ‘ஆரம்பம்’ படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார்.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது. அவந்திகாவுடன் சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் நாள் படப்பிடிப்பில் அவந்திகா கலந்து கொண்டபோது, படக்குழுவினர் அனைவரும் கைத்தட்டி அவரை வரவேற்றதாக கூறப்படுகிறது. கதை கேட்பது முதல் நடிக்க ஒப்புதல் அளிப்பது வரை அனைத்தையும் அவந்திகாவே தீர்மானிக்க வேண்டும் என குஷ்பு அறிவுறுத்தியிருந்தாராம். முதல் நாள் படப்பிடிப்பிலும் அவர் தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டு நடித்துள்ளார். மேலும், தமிழில் உருவாகும் ‘டபுள் ஆக்குபன்ஸி’ திரைப்படத்திலும் அவந்திகா நடித்து வருகிறார்.

அவந்திகா கூறுகையில், “நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று கூறியபோது, இது சாதாரண விஷயம் அல்ல, கடினமான துறையாகும், கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி ஆதரவு அளித்தார்கள். அதன்பிறகு உடல் அமைப்பை சீராக வைத்துக்கொள்ள உழைத்தேன். இப்போது சினிமாவை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு இந்த துறைக்குள் வந்துள்ளேன். என்னை அம்மாவுடன் உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த வாய்ப்புகள் எனக்கும் கிடைக்க வேண்டும். அதற்காக அவர் எடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பும் எனக்கும் அமைய வேண்டும். அதை நான் செய்ய முடியுமா என்பதை நிரூபிக்க முயற்சி செய்கிறேன்.

இயல்பாகவே அம்மாவின் பண்புகள் என்னுள் உள்ளன. அதனுடன் என் உழைப்பும் சேர்ந்து, சினிமாவில் அம்மா பெற்ற இடத்தைப் போன்ற நிலையை அடைய முடியும் என நம்புகிறேன். என்னை முழு சுதந்திரத்துடன் வளர்த்துள்ளனர். எந்த அழுத்தமும் தரவில்லை. தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். மக்களுக்கு பிடித்த கதாநாயகியாக நிச்சயமாக உருவாவேன். அதற்காக முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறேன்,” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading