மலையாள திரைப்பட உலகில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது மலையாளத்தை விட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துவருகிறார். குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு சிறப்பான வரவேற்பும் தனிப்பட்ட ரசிகர் வட்டாரமும் உருவாகியுள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அசைவ உணவு குறித்து பேசும்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக மட்டன் சாப்பிடவில்லை என்றும், அதை நிறுத்த காரணமான ஒரு உணர்ச்சி மிகுந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தெலுங்கில் ‘கார்த்திகேயா 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஆடுகளை வளர்க்கும் பட்டி ஒன்று இருந்ததாக அவர் தெரிவித்தார். படப்பிடிப்பு இடைவேளைகளில் அங்கு இருந்த ஆடுகளுடன் விளையாடுவது தனது வழக்கமாக இருந்ததாகவும் கூறினார். ஒரு நாள் படக்குழுவினருக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. அதே நாளின் மாலையில், மதியம் பரிமாறப்பட்ட அந்த மட்டன் பிரியாணிக்காக வெட்டப்பட்ட ஆடு, தானே விளையாடியிருந்த அதே ஆடு என்பதைக் தனது உதவியாளர் மூலம் அறிந்துகொண்டதாக அவர் கூறினார்.
இந்த தகவலை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அந்த நாளில் முழுவதும் மனஅழுத்தத்திலிருந்து மீள முடியாமல் இருந்ததாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் தான் தன்னை முழுமையாக மாற்றியதாகவும், அன்றிலிருந்து இன்று வரை மட்டன் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும் கூறினார். இன்றும் கூட அந்த நினைவு சில நேரங்களில் மனதை வருத்தமாக்குகிறது என்று அவர் உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
