தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன் பின்னர் தமிழில் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்துவரும் அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பைசன்” திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான “லாக் டவுன்” திரைப்படத்தில் தனது வித்தியாசமான மற்றும் உணர்ச்சி மிக்க நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாசப் புகைப்படங்கள் பரப்பப்படுவது குறித்து அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நடிகைகளின் போலியான ஆபாசப் புகைப்படங்களை திட்டமிட்டு சிலர் வெளியிட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் விஷம நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கேடுகெட்ட செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் சட்ட ரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது இவ்வாறான கேவலமான செயல்கள் முற்றிலும் ஒழியும் என்று அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
