நடிகை பிரியங்கா மோகன், கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’, ‘டிக்டிக்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓஜி’ திரைப்படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்த அவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இது குறித்து பிரியங்கா மோகன் கூறியதாவது: “தமிழ் திரைப்படங்களில் நான் இடைவெளி எடுத்ததாக நான் நினைக்கவில்லை. தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். தற்போது கவினுடன் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘மேட் இன் கொரியா’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். தமிழர்களுக்கும் கொரியர்களுக்கும் பண்பாட்டு மற்றும் கலாச்சார ரீதியாக ஒரு வரலாற்று தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாண்டிய நாட்டின் ஒரு இளவரசி கொரியாவிற்கு சென்று அங்குள்ள இளவரசரை திருமணம் செய்து கொண்டு தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அங்கு பரப்பியதாகச் சொல்லப்படுகிறது. அந்த இளவரசியின் கல்லறை அங்குள்ளது. நாங்களும் அங்கு சென்று பார்த்தோம். அந்த வரலாற்றுச் சம்பவத்தை இன்றைய சமூகத்துடன் இணைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படும் ஒரு தமிழ் பெண் கொரியாவிற்கு செல்கிறாள். அங்கு அவள் சந்திக்கும் சவால்களே இந்த படத்தின் மையக்கரு. தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தாலும் தமிழிலும் தொடர்ந்து நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா மோகன்.
