ரம்பா என்ற பெயரை 99ஸ் தலைமுறை யாரும் மறக்க முடியாது. ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகிய லைலா’ பாடலில் அவர் ஆடிய ஆடை பறக்கும் நடனம் இன்று வரை ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விஜயகாந்த், அர்ஜூன், கார்த்தி, பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரம்பா. தற்போது அவர் கனடாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த ரம்பா, இடைக்கிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தோன்றியிருந்தார். குறிப்பாக நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று ரசிகர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், விரைவில் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.
திரைப்படங்களுக்கு மீண்டும் வருவதற்காக அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து உடல் எடையை குறைத்து சுறுசுறுப்பான தோற்றத்தை பெற்றுள்ளார். புதிய கதைகளை கேட்டு வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஓரிரு கதைகளைத் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ரம்பா. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
