தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குத் திரைப்படத் துறையிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பின்னர் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், உடல்நலப் பிரச்சினைகளைக் கடந்து தன்னை மீண்டும் உருவாக்கிக் கொண்ட அனுபவங்களைப் பற்றி பல பேட்டிகளில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் முதன்முறையாக மனம்தொடும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், விவாகரத்து என்ற நிலையைச் சந்தித்தபோது, நான் என்னை முழுமையாக உலகத்திலிருந்து விலக்கிக் கொண்டேன். இனி ஒருவரை மீண்டும் நம்புவது அல்லது அவருடன் நெருக்கமாக பழகுவது சாத்தியமில்லை என்று எண்ணினேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இருந்தேன்.
அந்த அனுபவத்தின் மூலம் நான் இன்னும் வலுவான மனிதராக மாறியுள்ளேன். அதற்குக் காரணம் ராஜ் என்ற மனிதர். சில நாட்களுக்கு முன்பு ஒரு பழைய தோழியைச் சந்தித்தேன். பின்னர் அவள் எனக்கு அனுப்பிய குரல் செய்தியில், ‘நீங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக சிரமமின்றி சுவாசிப்பது போல தெரிகிறது’ என்று கூறியிருந்தாள். எனவே இனி நான் யாரிடமும் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
