நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்த தகவலை நடிகர் அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மும்பையில் உள்ள தனது இல்லத்திற்கு முன்பு ரசிகர்கள் திரண்டு வந்து அவரை பார்க்கும் பழக்கம் இருப்பதாகவும், அந்த சந்திப்பு அவருக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருப்பதாகவும் அமிதாப்பச்சன் கூறியுள்ளார். இந்த முறை தான் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருப்பதால், ரசிகர்களை நேரில் சந்திக்க முடியாது என்பதை தெரிவித்தார். ரசிகர்கள் காத்திருக்கும் சில புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டு, “இந்த ஞாயிற்றுக்கிழமை நான் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர்களை சந்திக்க முடியாது என்பதை சொல்லுங்கள். இருந்தாலும் அவர்கள் வழக்கம்போல் உறுதியாக வந்து காத்திருப்பார்கள். மன்னிக்கவும், வேலை முதலில்; மற்றவை அதன் பிறகு தான்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாக படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். அந்த பதிவில், “மிகச் சிறந்த கலைஞரான கமல்ஹாசனை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக வேலை செய்ய இருக்கிறோம். கடைசியாக ‘கிராப்தார்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். தற்போது ‘கல்கி 2’ பணிகள் தொடங்கிவிட்டன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
