மலையாள திரைப்பட உலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகமும் தயாராகி வருகிறது. இந்த புதிய பாகம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. அதன் தெலுங்கு பதிப்புகளில் நடிகர் வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தை நடிகை ஸ்ரீபிரியா இயக்கியிருந்தார்; இரண்டாவது பாகத்தை மீண்டும் ஜீத்து ஜோசப் தான் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், ‘திரிஷ்யம்’ மூன்றாம் பாகத்திலும் நடிக்க நடிகர் வெங்கடேஷை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை மரியாதையுடன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களத்தில் மீண்டும் மீண்டும் நடிப்பது ரசிகர்களிடம் புதிய ஆர்வத்தை உருவாக்காது என்று அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ‘திரிஷ்யம்’ மூன்றாம் பாகத்தில் வெங்கடேஷுக்கு பதிலாக மற்றொரு நடிகரை தேர்வு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
