நீட் தேர்வு முறைகேடு தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக திரையுலக பிரபலங்களின் குரலும் வலுத்து வருகிறது. தமிழகத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆதரவை பதிவு செய்துள்ளனர். அதேபோல் பாலிவுட்டிலும் சல்மான் கான், ஆலியா பட், கரீனா கபூர் கான், சோனாக்ஷி சின்ஹா, சாரா அலி கான், வருண் தவான், நோரா பதேஹி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, நடிகர்கள் மன்சூர் அலிகான், கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் மாணவர்களுடன் இணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தச் சூழலில், இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்தும் மாணவர்களுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய மாணவர்களுடன் நான் தோளோடு தோள் நிற்கிறேன். மாணவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம்; அவர்களின் குரல்கள் மரியாதையுடன் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் நம்பிக்கை, நியாயம் மற்றும் தன்னம்பிக்கையை வழங்கும் கல்வி முறை உருவாக வேண்டும். அந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
