கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பல வீடுகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்த சம்பவமும் அப்போது நிகழ்ந்தது. அந்த விபத்தில் சந்தியா என்ற பெண் நிலச்சரிவில் சிக்கி மோசமாக காயமடைந்தார். அவரது ஒரு காலை மருத்துவர்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், மம்முட்டியின் அறக்கட்டளை சார்பில் சந்தியாவுக்கு உதவி வழங்கப்பட்டது. கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்கு பிந்தைய நிலையில் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கொச்சியில் நடைபெற்று வந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருந்த மம்முட்டி, நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சந்தியாவின் உடல்நிலையை விசாரித்தார். அவருடன் நேரில் பேசி ஆறுதல் கூறியதுடன், தொடர்ந்து தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பே சந்தியாவிற்கு ஒரு புதிய வீடு வழங்கப்படும் என்று மம்முட்டி வாக்குறுதி அளித்திருந்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில் மலங்கர ஆர்த்தடாக்ஸ் செரியன் சர்ச் நிர்வாகம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ள 100 வீடுகளில் ஒன்றை சந்தியாவிற்கு ஒதுக்கியுள்ளது. இந்த தகவலையும் மம்முட்டி நேரில் சென்று அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
