நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டிப் போகவோ வரவில்லை! -நடிகர் சிவகார்த்திகேயன் பளீச்!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் தாயார் நடித்திருக்கும் திரைப்படத்தின் விழா என்பதால் ராதிகாவின் மகன் ராகுலும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக திரைப்படங்களை இயக்கிய அருண்ராஜ் காமராஜ், கார்த்திக் வேணுகோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படமும், சரத்குமார் நடித்துள்ள ‘ஆழி’ திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை குறிப்பிட்டு அவர் ரஜினி நடித்த படத்தை இயக்கியிருந்தாலும் மீண்டும் தன்னுடன் ஒரு திரைப்படம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தானும் நடிகர் சூரியும் பல ஆண்டுகள் கடந்த பிறகும் இதே நட்புடன் இருக்க வேண்டும் என்ற ஆசையையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து தனது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் அவர் பேசினார். தன்னுடைய குடும்பம் நல்ல நிலைக்கு வந்தபோது தனது நண்பர் அருண்ராஜ் காமராஜிற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘கனா’ திரைப்படத்தை தயாரித்ததாக கூறினார். தாங்கள் திருச்சியில் இருந்து கனவுகளுடன் வந்தவர்கள் என்றும் இன்று அந்த கனவுகள் நனவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்களின் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் ‘கனா’ திரைப்படம் உருவாக்கப்பட்டது என்றும் உலகளவில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முக்கியமான படமாக அது அமைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ‘அமரன்’ திரைப்படத்திற்கு எட்டு விருதுகளும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்ததாகவும், ‘கொட்டுக்காளி’ திரைப்படம் உலகின் பல பகுதிகளில் திரையிடப்பட்டதாகவும் அவர் கூறினார். ‘தாய் கிழவி’ திரைப்படம் தன்னுடைய பாட்டி வாழ்ந்த ஊரை நினைவூட்டும் உணர்வை தருகிறது என்றும் தெரிவித்தார். இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தில் பல புதிய நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் என்று இயக்குநர் சிவகுமார் முருகேசனிடம் கமல் ஹாசன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திரைப்படத்தில் ராதிகா நடித்த விதத்தைப் பற்றியும் அவர் பேசினார். படப்பிடிப்பின் போது அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டபோதும் மற்ற நடிகர்களின் தேதிகள் கிடைக்காததால் அதை புரிந்து கொண்டு தொடர்ந்து நடித்துக் கொடுத்ததாக அவர் பாராட்டினார். மேலும் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற ஆசை தன்னிடம் இருப்பதாகவும், கிடைத்த பெயர், புகழ் மற்றும் பணம் தன்னுடைய வாழ்க்கைக்கே மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறேன் என்றும் அவர் கூறினார்.

தான் யாருடனும் போட்டியிடவோ யாரையும் முந்திச் செல்லவோ அல்லது யாரையும் தாக்கவோ வரவில்லை என்றும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். தொடர்ந்து இந்த திரைப்படங்கள் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் தாம் மறுபதிப்பு திரைப்படங்களை செய்ய விரும்பவில்லை என்றும், நல்ல கதைகள் கிடைத்தால் மட்டுமே திரைப்படங்களில் நடிக்கிறேன் என்றும் அவர் கூறினார். தன்னுடைய குறைகளை பலமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன் என்றும், மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். திரையுலகில் சிலர் தடைகளை உருவாக்கினாலும் அதை தாண்டி வர தயாராக இருக்கிறேன் என்றும், அவை நீங்கினால் பல இயக்குநர்களை உருவாக்குவேன் என்றும் அவர் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading