சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (பிப். 23) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராதிகா சரத்குமார், தன்னை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜா இந்தப் படத்தை பார்க்க முடியாதது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தார். “இந்தப் படத்தை எப்படியாவது அவருக்கு காட்டிவிடு; அவர் பார்த்தால் எழுந்து உட்கார்ந்து விடுவார்” என்று கமல் கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், தனது அம்மா இறந்தபோது பாரதிராஜா வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியதைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அப்போது ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் புகைப்படத்தை பார்த்த பாரதிராஜா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகவும், “நீயா இதை எல்லாம் செய்தது? என்று ஆச்சரியமாக கேட்டதாகவும் ராதிகா கூறினார். அவரது உடல்நிலை சீராகி இந்தப் படத்தை கண்டிப்பாக பார்ப்பார் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் தனது அம்மாவும் இந்தப் படத்தை பார்க்க முடியாதது தனது மனதில் பெரிய வருத்தமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தனது தந்தை எம்.ஆர்.ராதாவிற்கு தாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை இந்தப் படம் தான் என்றும் அவர் கூறினார். சினிமாவிற்கு முதலில் வந்த காலத்தில் தனது தந்தையின் பெயரைச் சொல்ல கூட சிலர் தடை செய்ததும், அவமானப்படுத்தியதும் நடந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் இன்று அந்த எல்லாவற்றையும் தாண்டி “நான் எம்.ஆர்.ராதாவின் மகள்” என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன் என்று ராதிகா உணர்ச்சியுடன் பேசியுள்ளார்.
