சென்னை உடனான தன்னுடைய உணர்வு குறித்து மனம் திறந்த‌ ‘கப்புள் பிரண்ட்லி’ பட இயக்குனர் அஷ்வின் சந்திரசேகர்!

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கப்புள் பிரண்ட்லி’. தெலுங்கு திரைப்படமாக இருந்தாலும் இந்த படத்துக்கும் சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. படத்தின் கதை முழுவதும் சென்னையை மையமாக கொண்டு அமைந்துள்ளது. இந்த படத்தை இயக்கிய அஷ்வின் சந்திரசேகர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ் தனது சென்னை அனுபவங்களை பகிர்ந்துகொண்டது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. தற்போது இந்த திரைப்படம் தமிழிலும் திரையிடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் தனது பயணத்தைப் பற்றி கூறியுள்ளார். தனது சொந்த ஊர் கோவை என்றும், தந்தை தூர்தர்ஷனில் பணியாற்றியதால் லக்னோவில் வளர்ந்ததாகவும் அவர் கூறினார். பின்னர் மீண்டும் சென்னை வந்தபோது தான் சினிமா மீது அதிக ஆர்வம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜிடம் ‘பசங்க 2’, ‘இது நம்ம ஆளு’, ‘கதகளி’ போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமும் இருப்பதாக கூறினார். அதன் பிறகு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையால் ஒரு குறும்படம் உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

அந்த குறும்படத்தை பார்த்த நடிகர் சந்தோஷ் ஷோபன் இந்த திரைப்பட வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் கூறினார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் யு.வி. நிறுவனமே இந்த திரைப்படத்தை தயாரித்தது என்றும் தெரிவித்தார். தெலுங்கு திரைப்படமாக இருந்தாலும் கதையின் பின்னணி சென்னைதான் இருக்க வேண்டும் என்று தன்னால் உறுதியாக கூறப்பட்டதாகவும், அதனை படக்குழுவும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விளக்கினார்.

சென்னையின் பரபரப்பான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், முதலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியை வைத்து பயிற்சி நடத்தி பின்னர் முழுமையாக படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார். சில இடங்களில் புதுமுகங்கள் நடித்ததால் குறும்படம் அல்லது விளம்பரப் படம் எடுக்கிறோம் என்று கூறி படப்பிடிப்பு செய்ததாகவும் தெரிவித்தார். படம் பார்த்த பலரும் சென்னையின் இடங்களை குறிப்பிட்டு பாராட்டியதாகவும், அதற்கு ஒளிப்பதிவாளர் தினேஷின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கூறினார்.

மேலும் தனது குறும்படத்தில் பணியாற்றிய ஆதித்யாவே இந்த திரைப்படத்திற்கு இசையமைத்ததாகவும் தெரிவித்தார். பெரிய தயாரிப்பு நிறுவனம் இருந்தபோதும் தனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார். பின்னணி இசையும் பாடல்களும் பாராட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

தெலுங்கு ரசிகர்களும் சென்னையின் உணர்வை ஏற்றுக்கொண்டதாகவும், பலருக்கும் சென்னையுடன் படிப்பு அல்லது வாழ்க்கை தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார். அதுவே இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். சென்னையை இவ்வளவு அழகாக பதிவு செய்ததை பலர் பாராட்டியதாகவும் கூறினார். நடிகர் பிரபாஸ் சென்னையைப் பற்றி பேசியது வைரலானது என்றும் தெரிவித்தார். மேலும் படம் பார்த்த தனது குருநாதர் பாண்டிராஜும் பாராட்டியதாகவும் அவர் கூறினார்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகியை தேர்வு செய்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்ததாகவும், பலரை பார்த்த பிறகு இறுதியில் அவரை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். அவர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் என்றும் கூறினார். மேலும் கதாநாயகன் சந்தோஷ் ஷோபன், பிரபாஸ் மற்றும் த்ரிஷா நடித்த வெற்றி பெற்ற ‘வர்ஷம்’ திரைப்படத்தை இயக்கிய சோபனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading