இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர் நேரடியாக இந்திய திரைப்படத்தில் நடிப்பது இதுவாகும் என்பதால் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த சூழலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவிடம், அவர் ஏன் பாலிவுட் திரைப்படங்களை விட்டு ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சென்றார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதற்கு பதிலளித்த அவர், “இந்திய சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் சில காரணங்களால் பல கட்டுப்பாடுகள் என்னைச் சுற்றி உருவாகிக் கொண்டிருந்ததை நான் உணர்ந்தேன். அதே நேரத்தில் நான் இருந்த நிலையைத் தாண்டி மேலும் வளர வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது. அந்த எண்ணமே என்னை ஹாலிவுட் திரைப்படங்களுக்குச் செல்லத் தூண்டியது.
என்னதான் இருந்தாலும் இந்திய சினிமா மீது எனக்கு உள்ள நேசமும் பாசமும் ஒருபோதும் குறையாது. பாலிவுட் சினிமாவா பெரியது, ஹாலிவுட் சினிமாவா பெரியது என்று ஒப்பிடும் எல்லைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ‘இதுதான் உன் எல்லை’ என்று சொல்லி என்னை எந்த வரம்பிற்குள்ளும் வைத்துவிட யாராலும் முடியாது. எனக்கு எல்லை என்றே ஒன்றில்லை” என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
