எல்லா மதங்களையும் நேசிக்கும் மனப்பான்மையை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது கேரளா – நடிகை அன்னா பென் OPEN TALK!

மலையாள திரைப்படங்களில் பஹத் பாசில் நடித்த ‘கும்பலாங்கி நைட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அன்னா பென். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த ‘ஹெலன்’ திரைப்படம் அவரை மிகவும் பரவலாக அறிமுகப்படுத்தியது. அந்த திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பின்னர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு நடிகர் சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் மூலம் அன்னா பென் தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார்.

இந்த நிலையில் சமீபத்தில் கொச்சியில் அமைந்துள்ள தைக்கட்டு மகாதேவ கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் அன்னா பென் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து கோவில் திருவிழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அந்த விழாவில் அவர் பேசிய ஒரு கருத்தை பலர் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அன்னா பென் மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியரான பென்னி நாயரம்பலம் அவர்களின் மகள் ஆவார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியது என்னவென்றால், “என் அப்பாவின் பெயர் பென்னி நாயரம்பலம் என்று நான் யாரிடமாவது கூறினால், நாயரம்பலம் என்பது இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் பெயராக இல்லையா என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அதுபோல எனக்கு அன்னா என்று பெயர் வைத்துள்ளனர். பள்ளிக்கூடத்தில் கூட அன்னா என்றால் அன்னபூரணி தானா என்று கேட்கும் அளவுக்கு என் பெயர் பலரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தும். பின்னர் நான் திரைத்துறைக்கு வந்தபோது என் தந்தையின் பெயரையும் இணைத்து அன்னா பென் என்று வைத்துக் கொண்டேன். கேரளத்தின் கலாசாரம் எல்லா மதங்களையும் ஒன்றிணைத்து தழுவிக் கொண்டு செல்லும் மனப்பான்மையை எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading