மம்முட்டி அண்மைக் காலமாக பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார். எனினும், அந்த நிகழ்வுகளில் அவர் சற்றே சோர்வாக காணப்படுவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக் காலமாக அவர் சென்னையில் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு ஒரு வகையான நோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது சிகிச்சைக்கு பின் அவர் மீண்டும் உற்சாகத்துடன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரு மருத்துவமனை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் உரையாற்றியபோது, “சில மாதங்களாக எனக்கு வாசனை மற்றும் சுவை உணரும் திறன் பாதிக்கப்பட்டது. எந்தவொரு வாசனையையும் உணர முடியாத நிலை ஏற்பட்டது. உணவை சாப்பிட்டபோதும் அதன் சுவை தெளிவாக தெரியவில்லை. இது கொரோனா தாக்கமாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அது வேறொரு பிரச்சினை என்பதை அறிந்தேன். மனிதனுக்கு பார்வை மற்றும் கேள்வித் திறன் என்பது கடவுள் அருளிய வரங்கள். அதேபோல் சுவை உணரும் திறனும் மிக முக்கியமானது. தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “நாம் ஒருவரிடம் சத்தத்தை குறைக்கச் சொல்லவோ அல்லது மென்மையான குரலில் பேசச் சொல்லவோ முடிவது, நமக்கு கேட்கும் திறன் இருப்பதால்தான். கேட்க முடியாதவர்கள் அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றைக் கேட்க ஆவலாக இருப்பார்கள். கேட்பது என்பது உண்மையிலேயே ஒரு தெய்வீக வரமாகும்” என உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
