நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (டீஸர்) நாளை, பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ‘ராயா’ கதாபாத்திர அறிமுகக் காணொளி இணையதளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக யூடியூப் தளத்தில் மட்டும் 10 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ள இந்தக் காணொளி, பிற சமூக வலைதளங்களையும் சேர்த்து மொத்தமாக 20 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் யஷுடன் இணைந்து ருக்மிணி வசந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘டாக்ஸிக்’ திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சி நாளை காலை 9.35 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
