தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன் பாபு அவர்களின் மகளும், பிரபல நடிகையுமான லட்சுமி மஞ்சு, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் கடல், காற்றின் மொழி, இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லட்சுமி மஞ்சுவின் கருத்துகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் தனது உரையில், “நான் ஆணாதிக்க மனப்பான்மையை ஒருபோதும் ஏற்க மாட்டேன். திருமணம் என்பது ஒரு அழகிய உறவு. ஆனால் அந்த உறவில் ஒருவராவது தவறாக நடந்துகொண்டால், அந்த பந்தம் அர்த்தமற்றதாக மாறிவிடும். கணவனின் அடக்குமுறைகளை சகித்துக்கொண்டு வாழ்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வாக இருக்கலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருக்க வேண்டும் யாருக்கும் நம்மை அடிக்க உரிமை இல்லை. சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒருகாலத்தில் காதல் விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள கூட பயந்தோம். ஆனால் இன்று ‘நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன்’ என்று திறந்தவெளியில் கூறும் நிலை உருவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் நமது சிந்தனைகளையும் மனநிலையையும் பல்வேறு விதங்களில் மாற்றியமைத்துள்ளன. முன்பெல்லாம் ஒருவர் விரும்பிய பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல முயற்சிகளை மேற்கொள்வார். ஆனால் இப்போது ஒரே செய்தியை பல பெண்களுக்கு நகல் எடுத்து அனுப்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. உலகம் மிக வேகமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட நபர்களை அடையாளம் காண்பது பெண்களின் பொறுப்பாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
