மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வருபவர் மமிதா பைஜு. ‘ட்யூட்’ திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுடன் ‘கருப்பு’ திரைப்படத்திலும், தனுஷுடன் ‘கர’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்த அனுபவம் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மமிதா பைஜு, “இந்த அனைத்தும் மிக விரைவாக நடைபெறுகிறது. சில நேரங்களில் இது கனவு போல உணரப்படுகிறது. கடவுள் எனக்கு இந்த வாய்ப்புகளை வழங்கியதற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.
விஜய் குறித்து பேசும்போது, “விஜய் சார் நேரத்திற்கு முறையாக வருபவர். பேசுவதில் கொஞ்சம் அமைதியானவர். ஆனால் பழகத் தொடங்கினால் மிகவும் இனிமையான மனிதர். நாம் சாதாரணமாக பகிரும் ஒரு சிறிய விஷயத்தைக்கூட நினைவில் வைத்து, சில மாதங்கள் கழித்து சந்திக்கும் போது அதைப் பற்றி மீண்டும் கேட்பார். எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள்கூட நினைவில் இருக்காது. மதிய உணவாக சாலமீன் சாப்பிட விரும்புவார். நான் அவரிடம் ‘என்ன சார் சாலமீன் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்பேன்; அதற்கு அவர் ‘ஆமாம்’ என்று சிரித்துக்கொண்டு பதிலளிப்பார்” என அவர் பகிர்ந்தார்.
