‘சர்தார்’ முதல் பாகத்தின் இறுதியில், இந்திய ரகசிய உளவாளியான கார்த்தி, தனது மகனிடம் தன்னைப் பற்றிய உண்மைகளை கூறிவிட்டு செல்வது போல் கதை முடிந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக ‘சர்தார் 2’ கதை தொடங்குகிறது. தந்தையின் பாதையைத் தொடர்ந்து ரகசிய உளவாளியாக களமிறங்கும் கார்த்திக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அதிகாரிகளின் உத்தரவையும் மீறி ஒரு முக்கியமான மிஷனில் செல்கிறார். அப்போது நாட்டுக்கே பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதம் ஒன்று ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதும், அது எந்த நேரத்திலும் வெடிக்கும் ஆபத்தில் இருப்பதும் தெரிய வருகிறது.
இந்த அணு ஆயுதத்தின் பின்னணியில் கார்த்தி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோரின் தியாகங்களும் வெளிப்படுகின்றன. இதைத் தனது நாசகார திட்டத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள கூலிப்படை தலைவனான எஸ்.ஜே. சூர்யா முயற்சி செய்கிறார். மறுபுறம், நாட்டையும் மக்களையும் காப்பாற்ற பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக தொடரும் போராட்டத்தில் கார்த்தி மீண்டும் களத்தில் இறங்குகிறார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் மைசூரு தசரா திருவிழாவை தனது சதித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடமாக தேர்வு செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவரது திட்டத்தை தந்தையும் மகனும் இணைந்து முறியடித்தார்களா? தந்தை மீது சுமத்தப்பட்ட பழியை மகன் துடைத்தாரா? என்பதற்கான பதில்களை அதிரடியான திருப்பங்களுடன் சொல்கிறது மீதிக்கதை.
ரகசிய உளவாளி கதாபாத்திரத்திற்கு தேவையான தீவிரத்தையும் நியாயத்தையும் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் கார்த்தி. தந்தை, மகன் என இரு வேடங்களிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. மாளவிகா மோகனன் அழகான நடிப்புடன் ஆக்ஷன் காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு கதாநாயகியாக வரும் ஆஷிகா ரங்கநாத் கவனம் ஈர்க்கிறார். முந்தைய படங்களை ஒப்பிடும்போது நடிப்பிலும் முன்னேற்றம் தெரிகிறது.
எஸ்.ஜே. சூர்யா மிரட்டலான வில்லனாக படத்தின் முக்கிய பலமாக மாறியுள்ளார். அவரது குரலும் உடல்மொழியும் கதாபாத்திரத்தின் ஆபத்தான தன்மையை மேலும் உயர்த்துகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியுள்ள ஆஷிஷ் வித்யார்த்தியும் கவனிக்க வைக்கிறார். மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக உள்ளனர். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி வரும் இடங்களில் இடம்பெறும் டைமிங் காமெடி காட்சிகள் அவ்வப்போது சிரிக்க வைக்கின்றன.
ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் அதிரடி காட்சிகள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. சாம் சி.எஸ். இசை படத்தின் வேகத்துக்கு ஏற்றவாறு பயணிக்கிறது. இது அவரது இசையில் வெளியாகும் 100-வது படம் என்பதால், தனது இசைத் திறமையை பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ள பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது. பரபரப்பான சம்பவங்கள் படத்திற்கு பலம் சேர்த்தாலும், மொத்த நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்கலாம்.
