விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓ பட்டர்பிளை’. இந்த படத்தில் சிபி, நிவேதிதா சதீஷ், நாசர், லட்சுமி பிரியா, சந்திரமவுலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான திரில்லர் கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் விஜய் ரங்கநாதன் கூறியதாவது: “இந்த திரைப்படம் உறவு சிக்கல்களை மையமாகக் கொண்டு பேசும் ஒரு கதை. ஒரு பெண்ணுக்கும் இரண்டு ஆண்களுக்கும் இடையே உருவாகும் மனநிலை மற்றும் உறவு சிக்கல்களை விரிவாக சித்தரிக்கிறது. கே. பாலசந்தர் காலகட்ட படங்களின் உணர்வை, இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைத்து வழங்கியுள்ளோம். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ‘மூன்று முடிச்சு’ என்ற பெயரை வைக்க திட்டமிட்டிருந்தோம். கோத்தகிரி மலை உச்சிப் பகுதியில் தங்கி முழு படப்பிடிப்பையும் மேற்கொண்டோம். மலைப்பகுதிக்கு செல்லும் மூன்று பேரைச் சுற்றியே கதையின் முன்னேற்றம் நடைபெறுகிறது.
இந்த படத்தின் முக்கிய அம்சம் ‘லைவ்’ சவுண்ட் பதிவு செய்திருப்பதே. டப்பிங் எதுவும் செய்யப்படவில்லை. சிறிய பட்டாசு சத்தம் அல்லது பறவைகளின் சத்தம் கேட்கப்பட்டால்கூட அந்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
