நடிகர் ரவி மோகன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘புரோ கோட்’. இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ‘புரோ கோட்’ என்ற பெயருக்கு தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதாகக் கூறி, அதை பயன்படுத்தக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனை எதிர்த்து ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த திரைப்பட விவகாரத்தில் தலையிட மதுபான நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், மதுபான நிறுவனம் தலையிடக் கூடாது என்று தடை உத்தரவு வழங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும், இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
