தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சர்கார்’, ‘சத்யா’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் சற்று இடைவெளி எடுத்திருந்தார்.
இந்நிலையில், தனது சகோதரி பூஜாவுடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘சரஸ்வதி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் மூலம் வரலட்சுமி இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், ‘நடிகை Vs இயக்குநர்’ என்ற தலைப்பில் ‘சரஸ்வதி’ படம் தொடர்பான சுவாரஸ்யமான வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
