பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மைசூர் சோப் அம்பாசிடர் அறிமுக விழாவில் கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.பி. பாட்டீல், “மைசூரு சாண்டல் சோப்பு விளம்பரத்தில் நடிக்க சம்மதித்ததற்காக நடிகை தமன்னாவுக்கு எனது நன்றி. உலகளவில் அவருக்கு இருக்கும் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, 2030ஆம் ஆண்டுக்குள் மைசூரு சாண்டல் சோப்பின் விற்பனையை 5,000 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
கர்நாடக அரசின் சோப்பு தயாரிப்பிற்கான விளம்பர தூதராக வெளிமாநிலத்தைச் சேர்ந்த தமன்னாவை நியமித்திருப்பது கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, ருக்மணி வசந்த், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் கர்நாடகாவில் உள்ள நிலையில், ஏன் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், “தமன்னாவிற்கு சமூக வலைதளங்களில் 3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். வணிக ரீதியான நன்மையை கருத்தில் கொண்டு அவரைத் தேர்வு செய்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
