நடிகர் விமல் தற்போது திருச்சியில் நடைபெற்று வரும் தான் நடிக்கும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வாரச்சந்தையைப் பார்த்த விமல், காரில் இருந்து இறங்கி நேராக காய்கறி கடைக்குச் சென்றுள்ளார்.
அங்கு வியாபாரிகள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்த அவர், சிறிது நேரம் காய்கறி விற்பனையிலும் ஈடுபட்டார். அப்போது, “டேய் தம்பி இங்க வாடா…” என அருகிலிருந்த ஒருவரை அழைத்து, அவருடன் சேர்ந்து காய்கறிகளை விற்றுள்ளார். சந்தைக்கு வந்த பொதுமக்கள் நடிகர் விமலை அடையாளம் கண்டதும், அவரிடம் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர்.
விமலின் இந்த எதிர்பாராத செயல் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அவரைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அருகிலிருந்த வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்கிவிட்டு விமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
—
