2002ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா, திரிஷா, லைலா, நந்தா உள்ளிட்ட பலர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த காதல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 13) மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு, நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, இந்தப் படத்தில் நடித்தபோதைய தனது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.
தற்போது நடிகை திரிஷாவும் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “எனது முதல் திரைப்படமான ‘மௌனம் பேசியதே’ நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது. அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் சென்று இந்தப் படத்தை பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உணரப்படுகிறது. எப்போதுமே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இந்தப் படத்தின் மூலம் தான் என் சினிமா பயணம் தொடங்கியது. எனது முதல் படத்தில் அமீர் சார் உடன் பணியாற்றியதை இன்று மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நான் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அனுபவித்தேன். என் முதல் ரிலீஸ் சூர்யாவுடன் அமைந்தது. இப்போது என் அடுத்த படம் ‘கருப்பு’ வெளியாவதும் சூர்யாவுடனே வெளியாகிறது. இதனால் நான் ஒரு முழு வட்டத்தை முடித்த உணர்வில் இருக்கிறேன். யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. லைலாவுடன் இணைந்து நடித்ததும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படத்தை பார்த்து மகிழுங்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
