மலையாள திரையுலகில் கவனம் பெற்ற நடிகை ஷ்ருதி ராமச்சந்திரன், தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் மம்மூட்டியுடன் ‘களங்காவல்’ படத்தில் நடித்திருந்த இவர், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது குழந்தைப் பருவத்தில் கொண்டாடிய அனைத்து ஓணங்களும் நினைவில் இல்லை என்றாலும், தனது சகோதரி காவும் தானும் குழந்தைகளாக இருந்த ஒரு குறிப்பிட்ட ஓணம் மட்டும் நன்றாக நினைவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த ஆண்டில் தங்களது பெற்றோர் ஓணத்தை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக கூடுதல் முயற்சி எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஓணத்தின் வரலாறு மற்றும் அதன் பின்னணி குறித்து பெற்றோர் தங்களுக்கு விரிவாக எடுத்துச் சொன்னதாகவும், ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட அழகாக உருவாக்கப்பட்ட பூக்கலங்கள் தங்களது நினைவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காலனியில் இருந்து பறித்துச் சேகரித்த மலர்களை வைத்து, தங்களது சிறிய கைகளால் பூக்கலங்களை உருவாக்கிய அனுபவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த ஓணம் குறித்த தனது நினைவுகள், உண்மையில் இருந்ததைவிட கூடுதல் வண்ணங்களுடனும் சுவாரஸ்யத்துடனும் மனதில் பதிந்திருக்கலாம் எனக் கூறியுள்ள ஷ்ருதி, அந்த நினைவுகளைப் பற்றி தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அந்த மகிழ்ச்சியான உணர்வை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதே கொண்டாட்டத்தின் அழகு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
—
