இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ ஆகிய படங்களின் கலவையான கதைக்களத்துடன் இப்படம் உருவாகும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சகோதரர்கள் சண்டைக் காட்சிகளுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராம் பொதினேனி, ‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ராம் பொதினேனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டபுள் ஐஸ்மார்ட்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது தனது அடுத்த படத்தைத் தானே இயக்கும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
—
