80 வயதைக் கடந்த பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சன், அதே நேரத்தில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். திரையுலகில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ள அவர், தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் எதிர்கொண்ட கடினமான அனுபவங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
‘கோன் பனேகா குரோர்பதி 18’ நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், ஜந்து குமார், ஷர்மிளா தன்கர் மற்றும் அஸ்மிதா டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் கலந்துரையாடியபோது, விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் தவறு செய்யும்போது கண்டிக்கப்படுவதைப் போல, படப்பிடிப்புத் தளத்திலும் அத்தகைய அனுபவங்களை சந்தித்திருக்கிறீர்களா என அமிதாப் பச்சனிடம் அஸ்மிதா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமிதாப் பச்சன், தனது ஆரம்பகாலத்தில் நடிப்பைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பலர் கூறியதாக தெரிவித்தார். குறிப்பாக, தான் மிகவும் உயரமாக இருப்பதாகவும், வீட்டுக்கே திரும்பிச் செல்லுமாறும் சிலர் கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார். பின்னர் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தபோதும், வசனங்களை எப்படி பேச வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து கண்டித்து திருத்தியதாகவும் கூறினார்.
அந்த அனுபவங்களின் மூலமாகவே படிப்படியாக நடிப்பில் முன்னேறியதாக குறிப்பிட்ட அவர், படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்தில் செல்ல முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். இருப்பினும், ஒருமுறை படப்பிடிப்புக்கு தாமதமாகச் சென்ற சம்பவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.அப்போது சொந்தமாக கார் இல்லாததால் வேறொருவரின் காரில் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றதாக கூறிய அமிதாப், தான் அங்கு சென்றபோது இயக்குநர் வெளியே நின்றுகொண்டிருந்ததாக தெரிவித்தார். அவரைப் பார்த்த இயக்குநர் அன்றைய படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறி, அங்கிருந்து உடனடியாகச் செல்லுமாறு கூறியதாகவும் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
