இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’

இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் உருவாகி வரும் கிராமத்து பின்னணியிலான திரைப்படம் ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, சுப்ரமணிய சிவா, இசக்கி கார்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தென் தமிழகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் அன்றாட சம்பவங்கள் மற்றும் சமூக உறவுகளை மையமாகக் கொண்டு நகைச்சுவை கலந்து சொல்லப்படும் கதையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து மண்வாசனையுடன் கூடிய கதைக்களத்தில் மனிதர்களின் இயல்பான உணர்வுகள் மற்றும் சம்பவங்களை சித்தரிக்கும் முயற்சியாக இந்த படம் உருவாகி வருகிறது.

‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, அதன் உள்ளே கிராமத்தின் முகம், மக்கள், கோவில் போன்ற அம்சங்களுடன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்கும் சுகா ஒரு பிரபல எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவாக அறியப்படுகிறார். மேலும், அவர் மறைந்த நெல்லைக்கண்ணன் அவர்களின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply