ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை தயாரித்து முடித்த பின்னரும், அதை 100 ஆண்டுகள் கழித்தே வெளியிட உள்ளதாக அறிவித்து படக்குழு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில், ஜான் மல்கோவிச் நடித்துள்ள ‘100 இயர்ஸ்’ என்ற தலைப்பிலான இந்த திரைப்படம், 2115ஆம் ஆண்டில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் அக்கால மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்ட சயின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், சரியாக 100 ஆண்டுகள் கழித்து 2115ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “நீங்கள் பார்க்கவே முடியாத திரைப்படம்” என்ற தனித்துவமான டேக்லைனுடன் இந்த படத்தை விளம்பரப்படுத்தியும் வருகின்றனர்.
100 ஆண்டுகள் கழித்து வெளியானால் யார் இந்த படத்தை பார்ப்பார்கள்? ஏன் இப்படியான முயற்சி? தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியிலிருந்து நூற்றாண்டு காலம் வரை இந்த படத்தை எவ்வாறு பாதுகாப்பார்கள்? என்ற பல்வேறு கேள்விகள் இயல்பாக எழுகின்றன. 2115ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்தை பார்க்கும் மக்கள், 100 ஆண்டுகளுக்கு முன்பே அக்காலத்தை இப்படியாக கற்பனை செய்திருக்கிறார்களே என ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வித்தியாசமான யுக்தி பின்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிகவும் பாதுகாப்பான மற்றும் ரகசியமான இடத்தில், துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத சிறப்பு லாக்கரில் இந்த படத்தின் பிரதியை வைத்துள்ளனர். அந்த லாக்கரில் 100 ஆண்டுகளுக்கான டைமர் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணித்துளியும் குறைந்து, 100 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் அது தானாகவே திறக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் அந்த பிரதியை எடுத்துப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதை அறிவிக்கும் விதமாக ‘ரெட்ரோ’, ‘இயற்கை’, ‘எதிர்காலம்’ என மூன்று விதமான டீசர்களையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த டீசர்களில் இடம்பெறும் காட்சிகள் படத்தில் இடம்பெறாது என்றும் படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த படத்தில் என்ன இருக்கிறது என ஆவலுடன் கேட்பவர்களுக்காக, உலோகத்தால் தயாரிக்கப்பட்ட 1000 விஐபி டிக்கெட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளன. 2115ஆம் ஆண்டு நடைபெறும் பிரீமியர் காட்சிக்கான டிக்கெட்டாக இந்த 1000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. அவற்றை வாங்குபவர்கள், தாங்கள் பார்க்க முடியாவிட்டாலும் தங்கள் பேரக்குழந்தைகள் பார்ப்பார்கள் என்ற எண்ணத்துடன் வாங்கிக் கொள்ளலாம் என பரவலாக பேசப்படுகிறது. “எப்படியெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்! படம் வரும்; ஆனால் நாம பார்க்க முடியாது; ஆனாலும் இது புதுமையாக இருக்கிறது” என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
