நடிகர் சல்மான் கான் அடுத்ததாக ராணுவத்தை மையமாகக் கொண்ட ‘பேட்டில் ஆப் கல்வான்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் இந்திய ராணுவ பின்னணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், நடிகர் சஞ்சய் தத் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து பிஸியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘தி ராஜா சாப்’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தயாராகியுள்ள ‘7 டாக்ஸ்’ (7 Dogs) என்ற திரைப்படத்தில் சல்மான் கான் மற்றும் சஞ்சய் தத் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தில் எகிப்தைச் சேர்ந்த நடிகர் கரீம் அப்துல் ஆசிஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ‘பேட் பாய்ஸ் பார் லைப்’ மற்றும் ‘பேட் பாய்ஸ் ரைட் ஆர் டை’ போன்ற ஹாலிவுட் வெற்றி படங்களை இயக்கிய அதில் எல் அர்பி மற்றும் பிலால் பல்லா என்ற இரட்டை இயக்குநர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில் சல்மான் கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
