விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடிப்பதில் உருவாகும் ‘ஃபார்ஸி -2′ பணிகள் தொடக்கம்!

விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்த வெப் தொடர் ‘ஃபார்ஸி’ கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த வெப் தொடரை பிரபல இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடர், வெளியான குறுகிய காலத்திலேயே மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் விஜய் சேதுபதி காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். ஷாஹித் கபூர் மற்றும் அவரது நண்பர், கள்ள நோட்டுகளை அச்சிட்டு அதை சந்தையில் விற்பனை செய்யும் நபர்களாக கதாபாத்திரம் ஏற்றிருந்தனர்.

இந்த தொடரில் நடிகைகள் ராஷி கண்ணா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதல் சீசனின் இறுதியில், ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இடையே நடைபெறும் மோதலுடன், முக்கிய வில்லனான மன்சூர் தலால் கதாபாத்திரத்தை மையமாக வைத்து கதை முடிவடைகிறது. அதே சமயம், அடுத்த சீசனுக்கான தொடக்கத்தையும் அந்த இடத்திலேயே படக்குழு தெளிவாக காட்டியிருந்தது. ‘ஃபார்ஸி’ தொடர் மிகப்பெரிய ஹிட்டாக மாறியதுடன், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் ஒரே நேரத்தில் பாராட்டுகளை குவித்தது. ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து இந்த தொடரையும் எழுதி இயக்கியிருந்தனர்.

இந்த நிலையில், ‘ஃபார்ஸி’ வெப் தொடரின் இரண்டாம் சீசனுக்கான பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாகியதும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும், ராஜ் மற்றும் டிகே தற்போது ‘ராக்த் ப்ரம்மாந்த்’ என்ற புதிய வெப் தொடரை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading