காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த காதலை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி 7.3 என்ற மதிப்பீட்டை பெற்றுள்ளது. பெரும்பாலும் நேர்மையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த படம், உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையை இயல்பான முறையில் சொல்லுகிறது என பாராட்டப்படுகிறது.
கவிஞர் வைரமுத்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தப் படம் குறித்து பதிவிட்டதாவது: “ஒரு படம் பார்த்தேன். அது ஒரு கொரிய திரைப்படம். ‘Even If This Love Disappears Tonight’ என்பது அதன் தலைப்பு. இதனை ‘இன்றிரவே இந்தக் காதல் மறைந்து போகுமானாலும்’ என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். எந்தவித செயற்கைத் தாக்கமும் இன்றி, இலையில் நகரும் நீர்த்துளிபோல் இயல்பாக கதை நகர்கிறது. இது அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், சிறிய கவிதைகளின் நுண்ணுணர்வை ரசிக்கும் இதயங்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். என் அதிகாலை காபியின் நுரைகளில் நேற்றிரவு கண்ட நிலவொளி முகங்கள் நொறுங்கிய பிம்பங்களாக மிதந்தன,” என்று கவித்துவமாக பதிவு செய்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கும் ‘Even If This Love Disappears From the World Tonight’ திரைப்படம் கடந்த ஆண்டு தென் கொரியாவில் வெளியானது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை ஓடிடி மூலம் கண்டுகளித்து வருகின்றனர்.
