வெள்ளி விழாவை கொண்டாடிய ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் வெளியாகி 43 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் ரயில் பயணங்களை மையமாகக் கொண்டு சில படங்களை இயக்கியிருந்தார் டி. ராஜேந்தர். அதுவரை தன்னுடைய படங்களில் கேமியோ தோற்றம், கௌரவ வேடம் அல்லது சிறிய கதாபாத்திரங்களில் மட்டும் தோன்றி வந்த அவர், முழுநீள கதாநாயகனாக படம் முழுவதும் தோன்றிய முதல் திரைப்படம் ‘உயிருள்ள வரை உஷா’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது திரைப்படங்களில் இயக்கம் மற்றும் எழுத்து பணிகளுடன் மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசையமைப்பு, பாடல் எழுத்து உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று செயல்பட்டு வந்த டி. ராஜேந்தர், இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தும் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தினார். அதுவரை தமிழ் சினிமாவில் நிலவியிருந்த ஹீரோவுக்கான மரபுவழி இலக்கணங்களை உடைத்தெறியும் வகையில், தாடியுடன் கூடிய தோற்றம் மற்றும் வித்தியாசமான உடல் மொழியுடன் அவர் நடித்தது பெரும் கவனத்தை பெற்றது. இவ்வாறு ‘டி.ஆர். ஸ்டைல்’ என்ற புதிய அணுகுமுறையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய படமாகவும் இது திகழ்கிறது.
‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் டி. ராஜேந்தர் ‘தஞ்சை சினி ஆர்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரித்த முதல் படமாகும். தனது காதலியின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து உருவாக்கிய இந்த படத்தின் மூலம் நடிகர் கங்கா மற்றும் நளினி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். மேலும், பிரமாண்டமான செட் அமைப்புகளில் தனித்துவம் காட்டும் இயக்குநராக டி.ஆர். பெயர் பெற்றதற்கான தொடக்கமும் இந்த திரைப்படத்தின் மூலம் அமைந்தது.
இந்நிலையில், 43 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 13 ஆம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு டி. ராஜேந்தர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “1980களில் காதலை வெளிப்படுத்துவதற்கே மிகவும் சிரமமான சூழ்நிலை இருந்தது. ஒரு பெண்ணிடம் சென்று பேசுவதையே பெரும் விஷயமாகக் கருதினார்கள். அந்த நிலையில் காதலை எப்படி வெளிப்படுத்துவது, காதல் கவிதையை எப்படி சொல்லுவது என்ற மனநிலை இருந்தது. மௌனமான காதல் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் இருந்ததால் தான் ‘ஒருதலை ராகம்’ திரைப்படத்திற்கு பெண்களும் திரண்டு வந்தனர். படம் எடுத்தது டி. ராஜேந்தர். ஆனால் திரையரங்குகளுக்கு படையெடுத்தது பெண்கள்.
குடும்ப சூழ்நிலையால் தனது காதலை வெளிப்படுத்த முடியாத உணர்வை அந்த படம் பிரதிபலித்தது. நான் பல திரைப்படங்களை எடுத்திருந்தாலும் ‘உயிருள்ள வரை உஷா’ என்னை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற படம். அந்த காதல் கதையை இன்றைய 2K தலைமுறையினருக்கும் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதை மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு மீண்டும் வெளியிடுகிறேன்,” என்று தெரிவித்தார்.
