முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதன் கதை உருவான விதம் மற்றும் இயக்குநர் எச்.வினோத்துடன் பணியாற்றிய அனுபவங்களை இயக்குநர் இரா.சரவணன் பகிர்ந்துள்ளார். ‘துணிவு’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசனுக்காக வினோத் எழுதிய கதையின் முதல் பாதியை படித்தபோதே, ரசிகர்களின் கைதட்டலை அள்ளும் ஓப்பனிங் காட்சி அதில் இருந்ததாக தான் கூறியதாகவும், ஆனால் அந்தத் திட்டம் அடுத்தகட்டமாக முன்னேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கேரளா அழைத்துச் சென்ற வினோத், வழியில்தான் விஜய்யின் கடைசி படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறியதாக இரா.சரவணன் நினைவுகூர்ந்தார். அந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும், வினோத் அதை மிகவும் இயல்பாகவே எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
வினோத்தின் கதை விவாத முறை வித்தியாசமானது என்றும், நேரடியாக கதையைச் சொல்லாமல் வாழ்க்கை அனுபவங்களை கேட்டு, அதிலிருந்து கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் உருவாக்குவார் என்றும் தெரிவித்தார். மேலும், ‘வலிமை’ படத்தில் வசனம் எழுதுமாறு வினோத் கேட்டபோதும், அவரது எழுத்தின் மீது இருந்த மரியாதையால் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்ததாகவும் கூறினார்.
‘பகவந்த் கேசரி’ கதையை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றுவதற்காக வயநாட்டில் 33 நாட்கள் தங்கி கதை விவாதம் நடைபெற்றதாகவும், பெரிய ஹீரோ படத்திற்கான ஆலோசனைகள் கூட எளிமையான இடத்தில் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் திரும்பிய சில நாட்களில் அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது என்பதையும் நினைவுபடுத்தினார்.
பாலகிருஷ்ணாவின் கதையை விஜய்க்கு பொருத்தமான வகையில் மாற்றியதில் வினோத்தின் தெளிவு வெளிப்பட்டதாக பாராட்டிய இரா.சரவணன், எங்கோ ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தன் திறமையை நம்பி வந்து கஷ்டப்பட்டு வாழ்ந்த ஒருவர் இன்று முதலமைச்சரின் படத்தை இயக்கும் உயரத்தை அடைந்திருப்பது பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வெற்றிக் கதை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
