கன்னட திரையுலகில் கடந்த ஜூலை மாதம் குறைந்த பட்ஜெட்டில் வெளியான படம் ‘சூ ப்ரம் சோ’. இந்த திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான ராஜ் பி.ஷெட்டி கதையின் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். வெளியானதும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் குறித்து தயாரிப்பாளர் ராஜ் பி.ஷெட்டி பேசுகையில், “இந்த படம் வெளியாவதற்கு முன்பு எந்த ஓடிடி நிறுவனமும் இதன் உரிமையை வாங்க முன்வரவில்லை. படம் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து, தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைப்பதை பார்த்த பிறகு, ஒரு ஓடிடி நிறுவனம் மிகவும் குறைந்த தொகைக்கு இதன் உரிமையை கேட்டது.
அவர்கள் கூறிய தொகைக்கு ஒப்புக்கொண்டால், கன்னட சினிமாவின் தரத்தையே நாமே குறைத்தது போல ஆகிவிடும் என்று நான் நினைத்தேன். அதனால், எனக்கு தேவையான வருமானம் தியேட்டர்கள் மூலமே கிடைத்து வருகிறது என்று கூறி அந்த ஒப்பந்தத்தை நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர், அதே நிறுவனம் மீண்டும் வந்து, முன்பு பேசிய தொகையை விட இரட்டிப்பு அளவு அதிகமாக தருவதாக கூறி, இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியது. அதனால், உங்கள் படத்தின் மீது நம்பிக்கை இருந்தால், முதலில் தியேட்டர்களில் அதை ஓடவிட்டு, அதன் பிறகே ஓடிடி உரிமையை விலை பேச வேண்டும்” என்று ராஜ் பி.ஷெட்டி தெரிவித்துள்ளார்.
