பான்-இந்தியா அளவில் பிரபல நடிகரான தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து சமீபத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தகவல் கிளம்பியது. அவரை நேரில் சந்திக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாத விதிமுறைகள் என மொத்தம் 42 நிபந்தனைகளை அவரது குழுவினர் முன்வைப்பார்கள் என்று காவேரி பரூவா என்ற விளம்பர ஆய்வாளர் ஒருவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அல்லு அர்ஜுனை சந்திக்கும் போது அவரது கண்களை நேராக பார்த்து பேசக் கூடாது, கை குலுக்கக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அந்த 42 நிபந்தனைகளில் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. பலரும் இதுகுறித்து பலவிதமான கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் குழு உடனடியாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “அல்லு அர்ஜுனைச் சார்ந்த சமீபத்திய சில கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதும் ஆகும். அவர் எப்போதும் மிகுந்த கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தன்னை நடத்திக் கொண்டுள்ளார். இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை எங்களால் மிகவும் தீவிரமாகக் கருதப்படுகிறது. எங்கள் சட்ட அணியினர் இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக அவதூறு வழக்குகளைத் தொடங்க உள்ளனர். சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புவதிலிருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டுகிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
