மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘தக்லைப்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரிஷா, அதன் பிறகு தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ திரைப்படத்திலும் நடித்துத் தனது பங்குகளை நிறைவு செய்துள்ளார்.
இந்த அனைத்து படங்களையும் முடித்த பிறகு, திரிஷா தற்போது அடுத்தடுத்த புதிய படங்களுக்காக காத்திருக்கிறார். அதே நேரத்தில், தனது உடல்தகுதியை சுறுசுறுப்பாகவும் பிட்டாகவும் வைத்திருப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்பு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாக பரவியது.
இந்த சூழலில், தற்போது மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் இன்னொரு வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒரு காலத்தில் நடைபயணம் செய்தாலே போதும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வார இறுதி நாட்களில், பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
