1980-களில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் கேங்ஸ்டர் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அக்கா’ வெப் தொடர், அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள இத்தொடர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. யஷ் ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ளார்.
இதில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோருடன் தன்வி அஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமான் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் உள்ள ‘பெர்னூர்’ என்ற கற்பனை நகரமே கதையின் பின்னணி. ஆண்கள் இல்லாத பெண்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற சிலர் திட்டமிட, அவர்களின் சதியை எதிர்த்து பெண்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதே தொடரின் மையக்கருவாக அமைந்துள்ளது.
தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இதுவரை நான் ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் ‘அக்கா’ தொடரில் நடித்திருக்கிறேன். இதில் பவானி என்ற பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்..ராதிகா ஆப்தே ருத்ராவாக வருகிறார். பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையான இது, வழக்கமான கதைக்களத்திலிருந்து மாறுபட்டது. ‘சாணிக் காயிதம்’ படத்தில் நான் நடித்தபோது, அந்தக் கதாபாத்திரத்தில் வன்முறை நிறைந்த காட்சிகள் அதிகமாக இருந்தன. ஆனால், பவானி அதற்கு நேர்மாறானவர். அவர் அமைதியுடனும் நிதானத்துடனும் செயல்படும் கேங்ஸ்டர். இந்தத் தொடருக்காக உருவாக்கப்பட்டுள்ள உலகமே புதுமையானது. ஒரு பகுதியை ஆளும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் கேங்ஸ்டராக நடிப்பது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.
